இந்தியா

புதுச்சேரி மருந்து கொள்முதல் ஊழல்: கவர்னர் விசாரணை கமிஷன் அமைக்க அ.தி.மு.க வலியுறுத்தல்

Published

on

புதுச்சேரி மருந்து கொள்முதல் ஊழல்: கவர்னர் விசாரணை கமிஷன் அமைக்க அ.தி.மு.க வலியுறுத்தல்

புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளரிடம் கூறியதாவது:- தெரு நாய்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது உள்ளிட்ட பல விஷயங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும், புதுச்சேரி விநாயகர் கோவிலிலும் சத்தியம் செய்து காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியலிங்கம் மற்றும் அப்போதைய காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் ஊழல் சம்பந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவர் அளித்து வரும் குற்றச்சாட்டுகள் மீது துணைநிலை ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்து இவர்களது குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில்  ஏழை, எளிய மக்களின் நன்மைக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சில நலத்திட்ட உதவிகளை அறிவித்திருந்தார்.அதன் அடிப்படையில் அரசு சார்பில் உதவிகள் பெறாத சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிக்கு மாதம் உதவித்தொகையாக 2500 மற்றும் மஞ்சள் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதே போன்று முதியோர், விதவை,கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோர்  பெறும் உதவித் தொகையில் 500 ரூபாய் உயர்த்தி தரப்படும் என அறிவித்திருந்தார்.தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் அறிவித்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இந்த ஒரு திட்டத்தை மட்டும் செயல்படுத்த அரசுக்கு மாதம் சுமார் 30 கோடியும், ஆண்டுக்கு சுமார் 360 கோடியும் நிதி தேவை. இதற்கான நிதியை தற்போதைய திருத்திய மதிப்பீட்டின்படி கூடுதல் நிதியை இதற்காக ஒதுக்கி உடனடியாக இந்த திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. அங்குள்ள கடைகள் இன்று வரை திறக்கப்படாததால் மக்கள் டி,காப்பி, தண்ணீர்,பழங்கள் கூட வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.கட்டி முடிக்கப்பட்ட 31 கடைகளில் ஏற்கனவே அங்கு இருந்த 15 நபர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நிர்ணயம் செய்யும் கூடுதல் தொகைக்கு அவர்களுக்கு கடைகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ள கடைகளை டெண்டர் விட வேண்டும். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ள தவறான உத்தரவை நீக்கம் செய்ய அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோன்று அங்கு கட்டி முடிக்கப்பட்ட கடைகளும் திறக்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல் காரணமாக இருந்தாலும் இந்த ஒரு பிரச்சனையும் துணைநிலை ஆளுநர் மாளிகை நிர்வாகம் ஒரு நிலைப்பாட்டையும், ஆளும் அரசு வேறு ஒரு நிலைப்பாட்டையும் எடுத்து வருவதால் அரசு அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அங்கு கட்டி முடிக்கப்பட்ட கடைகள் இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால் மக்கள் பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகின்றன. அதேபோன்று உள்ளாட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதிலும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு இன்றுவரை அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் அவர்கள் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. நேற்றைய தினம் இலங்கையில் நீதிமன்றம் அவர்களது நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்துள்ளது. இதற்கு மேலும் காரைக்கால் மாவட்ட மீனவர்களுடைய விடுதலை விஷயத்தில் ஆளும் புதுச்சேரி அரசு பாராமுகமாக இல்லாமல் ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.குறிப்பாக நீதிமன்ற உத்தரவுப்படி கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை ஜாமினில் எடுக்க இங்கிருந்து தகுதியான அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி உரிய வழக்கறிஞரை நியமித்து அவர்களது விடுதலைக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர்  கூறினார்.இந்தப் பேட்டியின் போது மாநில கழக இணைச் செயலாளர் ஆர்.வி. திருநாவுக்கரசு, மாநில கழக துணைச்செயலாளர் நாகமணி, மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version