தொழில்நுட்பம்

மழையிலும், பனியிலும் அணையாத தீ… 4,000 ஆண்டுகால மர்மம்! எங்க இருக்கு தெரியுமா?

Published

on

மழையிலும், பனியிலும் அணையாத தீ… 4,000 ஆண்டுகால மர்மம்! எங்க இருக்கு தெரியுமா?

கனமழையோ, உறைபனியோ, பலத்த காற்றோ… எது வந்தாலும் இந்த நெருப்பை அணைக்க முடியாது. சுமார் 4,000 ஆண்டுகளாக இது எரிந்து கொண்டே இருக்கிறது. ஒரு மலையின் 10 மீட்டர் நீளப்பகுதி, பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தகிக்கும் வெயிலையும் மீறி, அந்த நெருப்பு அனலைக் கக்குகிறது. இதுதான் அசர்பைஜான் நாட்டின் அப்செரோன் தீபகற்பத்தில் அமைந்துள்ள ‘யனார் தாக்’ (Yanar Dag) எரியும் மலைப்பக்கம் என்பார்கள்.இந்த அதிசயத்திற்கு காரணம், அசர்பைஜானின் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடக்கும் அபரிமிதமான இயற்கை எரிவாயு. சில இடங்களில் ஏற்படும் கசிவுகளால், அது பூமிக்கு மேலே வந்து இப்படித் தன்னிச்சையாகப் பற்றிக்கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இந்த அதிசய நெருப்பைக் கண்டு பயணிகள் மிரண்டும் போயிருக்கிறார்கள். 13ஆம் நூற்றாண்டில், புகழ்பெற்ற வெனிஸ் பயணி மார்கோபோலோ, இந்த மர்ம நெருப்பைப் பற்றி தனது பயணக் குறிப்புகளில் எழுதியுள்ளார். அவ்வழியாகச் சென்ற வணிகர்கள், இந்த ‘அணையா நெருப்பு’ பற்றிய செய்திகளை உலகம் முழுவதும் பரப்பினர். இதனால்தான், அசர்பைஜான் “நெருப்பின் நிலம்” (Land of Fire) என்றே அழைக்கப்படுகிறது.ஒரு காலத்தில், அசர்பைஜான் முழுவதும் இதுபோன்ற எரியும் மலைகள் நிறையவே இருந்தன. ஆனால், வணிக ரீதியாக எரிவாயு எடுக்கும் பணி தொடங்கியபோது, இந்த இயற்கையான கசிவுகள் எரிவாயுவின் அழுத்தத்தைக் குறைத்து தடையாக இருந்தன. அதனால், பெரும்பாலான நெருப்பு மலைகள் அரசாலேயே அணைக்கப்பட்டன. அவற்றில் தப்பிப் பிழைத்த சிலவற்றில், யனார் தாக் தான் இன்றும் நம்மை மிரள வைக்கும் மிகச் சிறந்த உதாரணம்.பண்டைய ஈரானில் தோன்றி, அசர்பைஜானில் தழைத்தோங்கிய ஜொராஸ்ட்ரிய மதத்தில், இந்த நெருப்பு வழிபாட்டிற்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மனிதர்களுக்கும், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திக்கும் இடையிலான ஒரு பாலமாக நெருப்பை அவர்கள் கண்டனர். நெருப்பை தூய்மையானதாகவும், வாழ்வளிப்பதாகவும் கருதி வழிபட்டனர். ஆனால் இன்று, யனார் தாக் பகுதிக்கு வருபவர்கள், மத நம்பிக்கையை விட, இந்த அரிய கண்கவர் காட்சிக்காகவே கூடுகின்றனர். குளிர்காலத்தில் பனித்துளிகள் விழும்போது, அவை இந்த நெருப்பின் அனலால் தரையைத் தொடும் முன்பே காற்றில் ஆவியாகிவிடும்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அசர்பைஜானில் எண்ணெய் வயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் கவனம் ‘கச்சா எண்ணெய்’ பக்கம் திரும்பியபோது, இந்த நெருப்பு வழிபாடு மெல்ல மெல்ல வழக்கொழிந்து போனது. 1975 ஆம் ஆண்டு இந்த தீக் கோயில் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இன்று, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த ‘நெருப்பின் வீடு’, ஆண்டுக்கு 15,000 பார்வையாளர்களை வரவேற்று, அசர்பைஜானின் பழங்கால நெருப்புக் கதைக்குச் சான்றாக நின்று கொண்டிருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version