இலங்கை

சவூதி அமைச்சருடன், அமைச்சர் விஜித முக்கிய கலந்துரையாடல்

Published

on

சவூதி அமைச்சருடன், அமைச்சர் விஜித முக்கிய கலந்துரையாடல்

ரியாத்தில் இடம்பெற்றுவரும் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) 26 ஆவது பொதுச் சபைக் அமர்வில் கலந்துகொள்வதற்காகச் சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானை இன்று (09) சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Advertisement

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்குச் சாதகமான சூழல் குறித்து அமைச்சர் விஜித ஹேரத் விரிவாக விளக்கியதுடன், பல்வேறு துறைகளிலும் நாட்டில் உருவாகியுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சவூதி அரேபியாவின் தனியார் துறைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளின் வர்த்தக சபைகளுக்கிடையில் ஸ்தாபிக்கப்படவுள்ள முதலாவது வணிக சபை தொடர்பிலும் அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் துறை இடைத்தொடர்புகளை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காகச் சவூதி அரேபியா மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளையும் அமைச்சர் பாராட்டியதுடன், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இலங்கையின் நீண்டகால மற்றும் அசைக்க முடியாத ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Advertisement

இவை தவிர, இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சவூதி தபால் சேவையினால் வெளியிடப்பட்ட நினைவு முத்திரையைச் சவூதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version