தொழில்நுட்பம்
தெரு நாயிலிருந்து விண்வெளி வீரர் வரை… லைகாவின் தியாகம் சொல்லும் வரலாறு!
தெரு நாயிலிருந்து விண்வெளி வீரர் வரை… லைகாவின் தியாகம் சொல்லும் வரலாறு!
அவள் பெயர் லைகா. 68 ஆண்டுகளுக்கு முன்பு, மாஸ்கோவின் பனிபடர்ந்த தெருக்களில் ஆதரவற்று அலைந்து திரிந்த சாதாரண நாய்க்குட்டி. ஆனால், 1957-ம் ஆண்டு, நவ.3-ம் தேதி, அந்தச் சிறிய ஜீவன், மனித வரலாற்றையே மாற்றியமைத்தது. ஆம், சோவியத் யூனியனின் ‘ஸ்புட்னிக் 2’ விண்கலத்தில் ஏறி, பூமியின் சுற்றுப்பாதைக்குச் சென்ற முதல் உயிரினம் என்ற அழியாப் புகழைப் பெற்றாள் லைக்கா.இந்த மாபெரும் பாய்ச்சல், விண்வெளியை வெல்லத் துடித்த மனிதகுலத்தின் துணிச்சலான படி. ஆனால், அந்தப் புகழுக்குப் பின்னால் மனதை உலுக்கும் தியாகம் மறைந்திருந்தது. அது ‘ஒன்-வே டிக்கெட்’ பயணம்; லைக்கா பூமிக்கு உயிருடன் திரும்புவதற்காக அந்தப் பயணம் வடிவமைக்கப்படவே இல்லை!ஏன் லைகா தேர்ந்தெடுக்கப்பட்டாள்?அப்போது, சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளிப் போட்டி (Space Race) உச்சத்தில் இருந்தது. ‘யார் முதலில்?’ என்ற கேள்வி விண்ணைப் பிளந்தது. இந்த அவசரப் போட்டியில், அறிவியலின் வேகத்திற்காக ஒரு அப்பாவி உயிரின் விலை கொடுக்கப்பட்டது. வெறும் 6 கிலோ எடை கொண்ட, மிகவும் அமைதியான குணமுடைய இந்த கலப்பின நாய்க்குட்டி, ஸ்புட்னிக் 2-ன் மிக மிகக் குறுகிய இடத்திற்குள் இருக்க கச்சிதமாகப் பொருந்தியதே அவள் தேர்ந்தெடுக்கப்பட காரணம்.அதற்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் நெஞ்சை பிழிய வைப்பவை. விண்கலச் சூழலைப் பழக்கப்படுத்த, நாளுக்கு நாள் சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டாள்; ராக்கெட் சீறிப்பாயும் விசையைத் தாங்க, அதிவேக மையவிலக்கு இயந்திரங்களில் (Centrifuges) சுழற்றப்பட்டாள்; விண்வெளியில் சாப்பிட, ஜெல்லி போன்ற பிரத்யேக விண்வெளி உணவுகளே அவளுக்குக் கிடைத்தன.அவசர பயணமும்… சோக முடிவும்!ஸ்புட்னிக் 1 வெற்றி பெற்று ஒரே மாதத்தில் ஸ்புட்னிக் 2 ஏவப்பட்டது. இந்த அவசரத்தில், லைகாவின் உயிரைக் காக்கத் தேவையான குளிர்சாதன வசதியையோ, முறையான உயிர் காக்கும் அமைப்புகளையோ உருவாக்கப் பொறியாளர்களுக்கு நேரமில்லை. லைகாவின் பயணம் சோதனை ஓட்டம் மட்டுமே. 4 ஆண்டுகளுக்கு பின் யூரி ககாரின் போன்ற மனிதர்கள் விண்வெளிக்குச் சென்றால் என்ன ஆகும் என்பதை அறிய, லைகாவின் உடலியல் மாற்றங்களைக் கண்காணிப்பதே இதன் ஒரே நோக்கம். விண்கலத்தில் இருந்த கருவிகள் லைக்காவின் இதயத் துடிப்பு, சுவாசம், அசைவுகளை பூமிக்கு அனுப்பின. ஒரு கேமரா அவளைப் படம்பிடித்தது. “லைகா பல நாட்கள் விண்வெளியில் உயிருடன் இருந்தாள்” என்று சோவியத் யூனியன் முதலில் பெருமையாக அறிவித்தது.ஆனால், பல பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தப் பனிக்கட்டி போன்ற உண்மை உருகி வெளிவந்தது. விண்கலம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே, உள்ளே இருந்த குளிர்சாதன அமைப்பு செயலிழந்து, அதிகப்படியான வெப்பம் மற்றும் தாங்க முடியாத மன அழுத்தத்தால் லைக்கா பரிதாபமாக உயிரிழந்தாள்.வரலாற்றில் அழியாத தியாகம்லைகா இறந்துவிட்டாலும், அவள் பயணம் வீண் போகவில்லை. விண்கலம் ஏவப்படும்போதும், சுற்றுப்பாதையிலும் ஏற்படும் கடுமையான உடல் அழுத்தங்களை ஒரு உயிரினத்தால் தாங்க முடியும் என்பதை அவளுடைய தியாகமே இந்த உலகிற்கு நிரூபித்தது. அவள் சென்ற பாதையில்தான், பிற்காலத்தில் விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பயணித்தார்கள். இன்று தைரியம்- தியாகத்தின் சின்னமாக லைகா மதிக்கப்படுகிறாள். மாஸ்கோவில் அவளது பங்களிப்பைப் போற்றும் சிலைகள், அவள் கதையை இன்றும் உலகுக்குச் சொல்கின்றன.பூமியின் அரவணைப்பைத் தாண்டி, லைக்கா மேற்கொண்ட அந்தக் குறுகிய, சோகமான பயணம், மனிதகுலத்தின் மாபெரும் சாதனைகளுக்குப் பின்னால், சில சமயங்களில் இதுபோன்ற மனதை உலுக்கும் தியாகங்களும் மறைந்துள்ளன என்பதை நமக்கு என்றென்றும் நினைவூட்டும் ஒரு கண்ணீர்க் காவியமாகும்.