தொழில்நுட்பம்
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் களஞ்சியம்: ஆழ்கடல் ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் களஞ்சியம்: ஆழ்கடல் ஆராய்ச்சியில் புதிய மைல்கல்!
கடலின் இருண்ட ஆழம் என்பது எப்போதுமே மர்மம்தான். ஆனால், ஆழ்கடலின் அடியில், மனிதகுலத்தின் பல சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கூடிய பல்லாயிரக்கணக்கான அதிசய உயிரினங்கள் ஒளிந்துள்ளன. ஆம், நாம் பேசுவது நுண்ணுயிரிகளைப் (Microbes) பற்றித்தான். இந்த விலைமதிப்பற்ற நுண்ணுயிரிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் ரகசியங்களைப் பற்றி ஆய்வு செய்யவும், இந்தியாவிலேயே முதல் முறையாக பிரம்மாண்டமான ‘ஆழ்கடல் நுண்ணுயிர் களஞ்சியத்தை’ (Deep-Sea Marine Microbial Repository) தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) நிறுவ உள்ளது.மத்திய அரசின் லட்சிய திட்டமான ‘ஆழ்கடல் திட்டத்தின்’ (Deep Ocean Mission) கீழ், இந்நவீன வசதி, நெல்லூரில் உள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடற்கரையோர வளாகத்தில் அமையவுள்ளது. இது வெறும் சேமிப்பு மையம் மட்டுமல்ல; இது ஒரு தேசிய வழிகாட்டு மையம். தொழில்துறை, உயிரி மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்காக, இந்த ஆழ்கடல் நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுப்பது, வளர்ப்பது மற்றும் அவற்றின் குணாதிசயங்களை ஆய்வு செய்வதே இதன் நோக்கம். கடற்பரப்பு, கடலடி மண், கடலடி மலைகள் எனப் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரிகள் இங்கு பாதுகாக்கப்படும்தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட பயனுள்ள நுண்ணுயிர்களைக் கண்டறிந்துள்ளனர். அவற்றில் சில, நமது அன்றாட வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடியவை. 2021-ல் அந்தமான் கடல் வண்டலில் ஒரு புதிய நுண்ணுயிரை (Bacillus clausii) கண்டறிந்தனர். இது எக்டோயின் என்ற மூலக்கூறை உற்பத்தி செய்கிறது.இது சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் விழாமல் தடுக்கும். கொடிய புற ஊதாக் கதிர்களிடமிருந்து (UV) பாதுகாக்கும். இந்த சூப்பர் தொழில்நுட்பம், ஏற்கனவே 3 அழகுசாதனப் பொருள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.2023-ல் கண்டுபிடிக்கப்பட்ட ‘பேசில்லஸ் சப்டிலிஸ் EB1’ என்ற நுண்ணுயிர் உண்மையான ‘சுற்றுச்சூழல் வீரன்’. கடலில் ஏற்படும் பயங்கரமான எண்ணெய் கசிவுகளை, வெறும் 3 நாட்களில் 93% வரை இது சுத்தம் செய்துவிடுகிறது. ஆழ்கடலின் கடும் அழுத்தத்திலும் இது அசராமல் வேலை செய்வது கூடுதல் சிறப்பு.இன்றைய மருத்துவ உலகின் மிகப்பெரிய சவால், எந்த ஆன்டிபயாடிக் மருந்துக்கும் கட்டுப்படாத ‘சூப்பர்பக்’ (Superbug) பாக்டீரியாக்கள்தான். 2017-ல், NIOT மற்றும் அண்ணா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து, MRSA போன்ற கொடிய பாக்டீரியாக்களைக் கொல்லும் ஒரு சக்திவாய்ந்த ஆழ்கடல் பாக்டீரியாவைக் (Streptomyces sp.) கண்டறிந்தனர். இது மிக வலிமையான இயற்கை ஆன்டிபயாடிக்கை உற்பத்தி செய்கிறது.’சாகர் நிதி’ (Sagar Nidhi) என்ற அதிநவீன ஆராய்ச்சிக் கப்பல் மூலம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று, சிறப்பு உபகரணங்கள் மூலம் இந்த நுண்ணுயிர் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அவை சேகரிக்கப்பட்ட அதே அழுத்தத்திலும், வெப்பநிலையிலும் பாதுகாக்கப்பட்டு ஆய்வகத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.உலகளவில் சுமார் 20 லட்சம் கடல் நுண்ணுயிரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் துறையில் சிறந்து விளங்க, தேசிய கடல் தொழில்நுட்ப குழுவினர் பிரான்சில் உள்ள 150 ஆண்டுகள் பழைமையான புகழ்பெற்ற கடல் ஆராய்ச்சி நிலையத்திற்குச் சென்று, தொழில்நுட்பப் பரிமாற்றங்களையும் ஆலோசனைகளையும் பெற்று வந்துள்ளனர்.