பொழுதுபோக்கு
என்னை விட நீதான் சூப்பரா நடிச்சிருக்க; சிவாஜியே பாராட்டிய நடிகை: இந்த படமும் பெரிய ஹிட்டு!
என்னை விட நீதான் சூப்பரா நடிச்சிருக்க; சிவாஜியே பாராட்டிய நடிகை: இந்த படமும் பெரிய ஹிட்டு!
தனது எமோஷனலான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சிவாஜி. எம்.ஜி.ஆர் எப்படி ஆக்ஷனில் கலக்கினாரோ அதேபோன்று சிவாஜி எமோஷனலில் கலக்கினார். சிவாஜிக்கு என்று இன்று வரையும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் இருக்கதான் செய்கிறது. ‘பராசக்தி’ தொடங்கி பல படங்களில் தனது ஆணித்தரமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிவாஜி. சினிமாவில் அறிமுகமான புதிதில் இவன் நடிகராக போகிறானா? என்று ஏளனம் பேசிய தயாரிப்பாளர்களை எல்லாம் தன் கால்ஷீட்டிற்காக வரிசையில் நிற்க வைத்தவர் சிவாஜி. சிவாஜி நடித்த படங்களில் ‘பாலும் பழமும்’ திரைப்படம் அவருக்கு மேலும் பெருமையை சேர்த்தது. சிவாஜியின் நடிப்பு சிறப்பைச் சொல்லும் படங்களில் ‘பாலும் பழமும்’ படத்துக்கும் முக்கியத்துவம் உண்டு. ஏ.பீம்சிங் திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம், பசுமணி இணைந்து கதை எழுதி இருந்தனர். சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, மனோரமா உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை சரவணா பிலிம்ஸ் தயாரித்தது.புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இருக்கும் மருத்துவர் சிவாஜி, செவிலியர் சரோஜா தேவியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அப்போது சரோஜாதேவிக்கு டிபி நோய் இருப்பது தெரியவருகிறது. ஆராய்ச்சியை விட்டுவிட்டு முழு நேரமும் மனைவியைக் கவனிப்பதில் நேரத்தைச் செலவிடுகிறார் சிவாஜி. இதனால் சரோஜா தேவி, சிவாஜியிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார். சரோஜா தேவி இறந்துவிட்டதாக தகவல் வருகிறது.இதையடுத்து வளர்பு தந்தை எஸ்.வி சுப்பையா மகள் சவுகார் ஜானகியை சிவாஜி திருமணம் செய்வார். இப்போது டி.பி நோய் சரியாகி சரோஜா தேவி திரும்ப வர, கண் பார்வை பறிபோனவராக இருப்பார் சிவாஜி. நர்ஸாக தன்னை கவனித்துக் கொள்வது தனது மனைவி சரோஜா தேவி தான் என்பது சிவாஜிக்கு தெரிய வருகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் கதை. இப்படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார்.இப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது. இந்நிலையில், இப்படத்தில் நடித்ததற்கு சிவாஜி தன்னை பாராட்டியது குறித்து நடிகை சரோஜா தேவி, நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, “பாலும் பழமும் படத்தில் நீ ரொம்ப பிரமாதமாக நடித்திருக்கிறார். என்னை விட நல்ல நடித்திருக்கிறாய் என்று சிவாஜி சொன்னார். அதுவே எனக்கு பெரிய விருது கிடைத்தது போன்று இருந்தது. அந்த வார்த்தை சிவாஜி வாயில் இருந்து வந்தது எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. இனிமே அப்படி சொல்வதற்கு சிவாஜியே பிறந்து வர வேண்டும்” என்றார்.