தொழில்நுட்பம்
குழந்தைக்கு சோறு ஊட்ட மட்டும் இல்லை நிலா… பூமியை விட்டு அது பிரிந்து சென்றால் ரணகளம்!
குழந்தைக்கு சோறு ஊட்ட மட்டும் இல்லை நிலா… பூமியை விட்டு அது பிரிந்து சென்றால் ரணகளம்!
மனிதன் மீண்டும் நிலவை நோக்கி தன் பார்வையைத் திருப்பியிருக்கிறான். நாசா, தனது புகழ்பெற்ற ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் மூலம் 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. அமெரிக்கா, இந்தியா, சீனா, ஐரோப்பா எனப் பல உலக நாடுகள் நிலவை நோக்கிய தங்கள் பயணத் திட்டங்களில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆனால், இந்த நிலா நமக்கு வெறுமனே ஒரு விண்வெளி இலக்கு மட்டுமல்ல. அது பூமி என்னும் இந்த கிரகம் உயிர்கள் வாழத் தகுதியானதாக (Habitable) இருப்பதற்கு மிக முக்கியக் காரணம். ஒருவேளை, நிலவு இப்போது இருக்கும் இடத்திலிருந்து சற்றே விலகியோ அல்லது நெருங்கியோ இருந்தால் என்ன ஆகும்? நமது கிரகம் இன்று இருப்பது போல் இருக்குமா?நிலவு இல்லாவிட்டால் என்ன ஆகும்?நமது பூமி தனது அச்சில் (Axial Tilt) சற்றே சாய்ந்து சுழல்கிறது. இந்தச் சாய்வினால்தான் நமக்கு மிதமான பருவகால மாற்றங்கள் (Seasons) மற்றும் நிலையான தட்பவெப்பநிலை கிடைக்கிறது. நிலவின் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை, பூமியின் இந்த அச்சு சாய்வை ஒரு நங்கூரம் போலப் பிடித்து, அதை நிலையாக வைத்திருக்கிறது.நிலவு மட்டும் இல்லையென்றால், நமது பூமி கட்டுப்பாடற்ற பம்பரத்தைப் போலத் தாறுமாறாக ஆட்டம் காணும். இதனால், நினைத்துப் பார்க்க முடியாத கொடூரமான காலநிலை மாற்றங்கள் ஏற்படும். சில பகுதிகள் உறைபனியாகவும், சில பகுதிகள் கொதிக்கும் பாலைவனமாகவும் மாறும். இப்படிப்பட்ட சூழலில் சிக்கலான உயிரினங்கள் வாழ்வதோ, பரிணாமடைவதோ சாத்தியமே இல்லை. நிலவு பூமியின் மீது செலுத்தும் ஈர்ப்பு விசையால்தான் கடல்களில் ஓதங்கள் (Tides) ஏற்படுகின்றன. இந்த அலை ஏற்ற இறக்கங்கள், வெறுமனே கடற்கரையை நனைத்துச் செல்லும் நிகழ்வு அல்ல.இந்த ஓதங்கள், கடல் நீரை மிகப்பெரிய அளவில் கலக்கிவிடுகின்றன. இதன் மூலம், கடலின் ஆழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் (Nutrients) மேல்மட்டத்திற்கு வருகின்றன; மேலும், நீருக்குத் தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கிறது. மீன்கள், பவளப்பாறைகள் என ஒட்டுமொத்த கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இந்தச் சுழற்சிதான் அடிப்படை ஆதாரம். ஆச்சரியமாக, பவளப்பாறைகள் முதல் புலம்பெயரும் பறவைகள் வரை பல உயிரினங்கள், தங்கள் இனப்பெருக்கம் மற்றும் வழிசெலுத்தலுக்காக (Navigation) நிலவின் கட்டங்களையே (Phases) நம்பியுள்ளன.பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவு மிகத் துல்லியமாக அமைந்துள்ளது. சுமார் 3,84,400 கிமீ தொலைவில் சந்திரன் நம்மைச் சுற்றி வருகிறது. இந்தத் தொலைவு ஏன் இவ்வளவு முக்கியம்?நிலவு பூமிக்கு அருகில் இருந்திருந்தால்?கற்பனை செய்து பாருங்க! நிலவின் ஈர்ப்பு விசை பன்மடங்கு அதிகரிக்கும். இது, கடல்களில் ‘மாபெரும் ஓதங்களை’ (Massive Tides) உருவாக்கும். இன்று நாம் காணும் அலைகள் போல் அல்லாமல், நூற்றுக்கணக்கான அடி உயர ராட்சத அலைகள் உருவாகி, கடலோரப் பகுதிகளைத் தினசரி மூழ்கடிக்கும். இது நிலப்பரப்பு வாழ்விடங்களை முற்றிலுமாக அழித்துவிடும். மேலும், பூமியின் சுழற்சி வேகத்தையும் இது பாதித்து, ஒரு நாளின் நீளத்தையே மாற்றியமைக்கும்.நிலவு தொலைவில் இருந்திருந்தால்?நிலவின் பிடி தளர்ந்துவிடும். ஓதங்கள் மிகவும் பலவீனமாகி, கடல் சுழற்சி பாதிப்படையும். கடல்வாழ் உயிரினங்கள் நெருக்கடியைச் சந்திக்கும். எல்லாவற்றையும் விடப் பெரிய ஆபத்து, பூமியின் அச்சு சாய்வு நிலையற்றதாக (Unstable) மாறும். மீண்டும், கணிக்க முடியாத, கொடூரமான காலநிலை மாற்றங்கள் பூமியில் நிகழத் தொடங்கும். எனவே, நிலவு என்பது இரவில் ஒளிரும் ஒரு அழகான பாறை மட்டுமல்ல. அது, நமது கிரகத்தின் ‘பாதுகாவலன்’.மிதமான காலநிலை, செழிப்பான பெருங்கடல்கள், கண்டங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் என இன்று நாம் காணும் இந்த அற்புதமான பூமி உருவாவதற்கு, நிலவு சரியான தொலைவில், சரியான அளவில் அமைந்ததும் ஒரு முக்கியக் காரணம். நமது கிரகத்தில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான நிலையான சூழலை உருவாக்கியது, நமது தனித்துவமான இந்த வானியல் துணைக்கோள்தான்.