இலங்கை

மகளிர் வித்தியாலயம் அருகே அடர் காடு: மாணவிகளுக்கு அச்சுறுத்தல்!

Published

on

மகளிர் வித்தியாலயம் அருகே அடர் காடு: மாணவிகளுக்கு அச்சுறுத்தல்!

கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், அரசாங்கத்துக்குச் சொந்தமான  காணி ஒன்று சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி காணப்படுகிறது.குறித்த காணி பராமரிப்பு இல்லாமலுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்  பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக  தெரிவித்துள்ளனர்.

இக்காட்டு பகுதியில் இரவு நேரங்களில் போதைபொருள் பாவனையாளர்களின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அயலில் உள்ள மக்களின் நிம்மதி குலைந்துள்ளது.மாணவிகளுக்கு எதிரான தொந்தரவு மற்றும் கிண்டல் நடவடிக்கைகள்  சில பதிவானதால் பெற்றோரிலும் பாடசாலை நிர்வாகத்திலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஒருபுறமிருக்க, சுகாதாரச் சீர்கேடும் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

அடர்ந்த புதர்கள் மற்றும் செடிகள் காரணமாக இப்பகுதியில் கொசுக்கள் பெருகி, டெங்கு நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கின்றனர். மேலும், இந்தக் காட்டுப் பகுதியில் அதிக அளவில் பாம்புகள் மற்றும் விஷப் பூச்சிகள் நடமாடுவதாகவும், இது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி உயிராபத்தை ஏற்படுத்துவதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான குறித்த காணி, பொதுமக்களின் பாதுகாப்புக்கும் மாணவிகளின் கல்விச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதால், இது குறித்து உரிய அதிகாரிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பகுதியை உடனடியாகச் சுத்தப்படுத்தி, காட்டை அகற்றி, பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், போதை பாவனையாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் இரவு நேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கந்தளாய் பிரதேச மக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version