தொழில்நுட்பம்
700,000,000,000,000,000,000 டாலர் மதிப்பு… விண்வெளியில் மிதக்கும் கோடிக்கணக்கான டன் தங்கம்!
700,000,000,000,000,000,000 டாலர் மதிப்பு… விண்வெளியில் மிதக்கும் கோடிக்கணக்கான டன் தங்கம்!
ஒரு சிறுகோள்… அது அத்தனையும் உலோகம். நமது செல்வம், அறிவியல், ஏன் விண்வெளி ஆய்வு பற்றிய நமது மொத்த பார்வையையுமே மாற்றி எழுதக் கூடிய சக்தி கொண்டது. இப்படி ஒன்று நிஜமாகவே செவ்வாய் கிரகத்திற்கும் வியாழனுக்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் பெயர் ’16 சைகே’ (16 Psyche). இது ஏதோ அறிவியல் புனைகதை அல்ல. நாசா (NASA) இந்த உலோகப் புதையலை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்பியும் விட்டது. இந்தப் பயணம் பிரபஞ்சத்தின் ரகசியங்களை மட்டுமல்ல, பூமியில் உள்ள மொத்த பணக்காரர்களையும் விட பல மடங்கு மதிப்புள்ள ஒரு புதையலையும் நமக்குக் காட்டப் போகிறது.பூமியின் மொத்த செல்வத்தையும் மிஞ்சும் ஒற்றை சிறுகோள்!’16 சைகே’ ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? காரணம், அதன் அபாரமான கலவை. இது முழுக்க முழுக்க இரும்பு, நிக்கல் மற்றும் தங்கம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனது. இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் $700 குயின்டில்லியன்! (அதாவது 700-க்கு அடுத்து 18 பூஜ்ஜியங்கள்). இந்த மதிப்பு, பூமியில் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தையும் விட பல்லாயிரம் மடங்கு அதிகம். ஒரு கணக்குக்காகச் சொன்னால், இந்த சிறுகோளில் உள்ள தங்கத்தை மட்டும் பூமிக்குக் கொண்டு வந்தால், இங்குள்ள ஒவ்வொரு மனிதரையும் கோடீஸ்வரர்களாக்கி விட முடியும்.ஆனால், நிஜமாகவே அத்தனை உலோகத்தையும் பூமிக்குக் கொண்டு வந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்: உலகச் சந்தையில் தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் விலை அதல பாதாளத்திற்குச் சரிந்து, உலகப் பொருளாதாரமே கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது. புதையல் பெரிதாக இருந்தாலும், அதை பூமிக்குக் கொண்டு வருவதில் உள்ள சவால்களும் பிரம்மாண்டமானவை.நாசாவின் நோக்கம் பணமல்ல, அறிவியல்!நாசாவின் ‘சைகே’ விண்கலம் அக்.2023-ல் தனது பயணத்தைத் தொடங்கிவிட்டது. அது 2029-ம் ஆண்டு ’16 சைகி’-ஐ சென்றடையும். நாசா நோக்கம் சுரங்கம் தோண்டுவது அல்ல. மாறாக, இந்த மர்மமான சிறுகோளைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதுதான். ’16 சைகே’ என்பது உண்மையில் என்ன? விஞ்ஞானிகள் நம்பும் தியரி… இது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகத் தவறிய ‘முன்-கிரகத்தின்’ (Protoplanet) உறைந்து போன ‘மையம்’ (Core) என்பதாகும். சூரியக் குடும்பத்தின் ஆரம்பகால மோதல்களில், அதன் வெளிப்புறப் பாறைகள் சிதறிப் போக, இந்த உலோக மையம் மட்டும் தனியாக மிதக்கத் தொடங்கியிருக்கலாம்.அப்படி என்றால், இது நமக்குக் கிடைத்த மாபெரும் ஜாக்பாட்! ஏனென்றால், நமது பூமியின் மையத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் ஒருபோதும் தோண்டிப் பார்க்க முடியாது. ஆனால், ’16 சைகி’-ஐ ஆய்வு செய்வதன் மூலம், ஒரு கிரகத்தின் மையம் எப்படி உருவாகிறது என்பதை நம்மால் நேரடியாகப் படிக்க முடியும்.’16 சைகே’ ஆரம்பம் மட்டுமே. பூமிக்கு அருகிலுள்ள ‘2011 UW158′ என்ற மற்றொரு சிறுகோளில் மட்டும் $5.4 டிரில்லியன் மதிப்புள்ள பிளாட்டினம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உலோகங்களை நாம் வெட்டி எடுக்க முடிந்தால், அது தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும். பூமியில் சுரங்கம் தோண்டுவதைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் பல சவால்கள் உள்ளன:பொருளாதார சவால், முன்பே சொன்னது போல், விலை சரிவு ஏற்படும் அபாயம். எடையற்ற, கொடூரமான விண்வெளிச் சூழலில் ரோபோக்களை வைத்து சுரங்கம் தோண்டுவது, சுத்திகரிப்பது என்பது மிக மிகச் செலவு பிடிக்கும் ஒரு காரியம். சரி, ஒரு சிறுகோளை அடைந்துவிட்டோம். அதில் உள்ள தங்கம் யாருக்குச் சொந்தம்? அதைக் கண்டுபிடித்த நாசாவுக்கா? அல்லது அது மனுக்குலத்தின் பொதுச் சொத்தா? இதற்கான சர்வதேச விண்வெளிச் சட்டங்கள் இன்னும் உருவாக்கப்படவே இல்லை.செல்வத்தைத் தாண்டி, ’16 சைகே’ போன்ற சிறுகோள்கள் நமது சூரிய மண்டலத்தின் பயங்கரமான இளமைக் காலத்தின் ‘டைம் கேப்சூல்கள்’. பூமி எப்படி உருவானது என்ற ரகசியங்கள் அவற்றில் உறைந்துள்ளன. அதே சமயம், இந்த சிறுகோள்கள் நமக்கு ஆபத்தானவையும்கூட. 2022-ல் நாசாவின் டார்ட் திட்டம், சிறுகோளின் மீது விண்கலத்தை மோதச் செய்து, அதன் பாதையை வெற்றிகரமாக மாற்றிக் காட்டியது. இது, எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் ஆபத்துகளைத் தடுக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். ‘சைகி’ போன்ற பயணங்கள், இந்த ஆபத்தான பாறைகளைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள உதவுகின்றன. நாம் இப்போது ஒரு புதிய யுகத்தின் வாசலில் நிற்கிறோம். ’16 சைகி’ என்ற இந்த பிரம்மாண்ட உலோகப் பெட்டகம், நம்மை ஆராயவும், புரிந்துகொள்ளவும், அதன் வளங்களைச் சிந்தனையுடன் பயன்படுத்தவும் அழைக்கிறது.