இலங்கை
இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை; 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
இந்திய மீனவர்கள் மூவருக்கு 06 மாத சிறை; 26 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்திவைத்துள்ளது .
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நெடுந்தீவினை அண்டிய கடற்பரப்பினுள் , அது மீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு படகுகளுடன் 29 பேர் கைது செய்யப்பட்டு , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , 29 பேரையும் குற்றவாளிகளாக மன்று கண்டது.
அதனை அடுத்து , படகோட்டிகள் இருவருக்கும் , படகின் உரிமையாளர் ஒருவருக்குமாக மூவருக்கு 06 மாத கால கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அதில் படகின் உரிமையாளர் ஒருவர் காணப்பட்டமையால் , அந்த படகினை அரசுடைமையாக்க உத்தரவிட்ட மன்று , அத்துடன் இரு படகின் உரிமையாளர்களுக்கும் தலா 40 இலட்ச ரூபாய் அபராதமும் விதித்தது.
மற்றைய படகின் உரிமையாளர் இல்லாதமையால் , அப்படகின் மீதான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இரு படகில் இருந்த ஏனைய 26 பேருக்கும் எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத காலமும் மற்றைய குற்றச்சாட்டுக்கு ஒரு வருட கால பகுதியுமாக 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 06 வருட காலங்களுக்கு மன்று ஒத்தி வைத்துள்ளது.
அதன் அடிப்படையில் , குறித்த 26 பேரும் எதிர் வரும் 06 வருட கால பகுதிக்குள் மீண்டும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டால் , இரண்டு வருட சிறைத்தண்டனையுடன் , பிடிபடும் கால பகுதியில் விதிக்கப்படும் சிறைத்தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.