இலங்கை
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்
உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.
340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) பரீட்சை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 பேருமாக மொத்தம் 3,41,525 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சைக்கு முன்னர் பரீட்சார்த்திகள் தங்கள் அனுமதி அட்டைகளைப் பெற்றிருப்பார்கள். பெறாதவர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
அனுமதி அட்டையில் உங்கள் பெயர், பாடம் குறியீடுகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொழி ஆகியவை சரியாக உள்ளதா என கவனமாகச் சரிபார்க்கவும்.
ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், தாமதமின்றி திணைக்களத்தைத் தொடர்புகொள்ளவும்.
பரீட்சை நடைபெறும் இரவில், உங்கள் அனுமதி அட்டை, அடையாள அட்டை, பேனாக்கள், பென்சில்கள் மற்றும் ஆடைகள் உட்பட அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பரீட்சை நாளில் பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்தை அடைய வேண்டும்.
காலைப் பரீட்சைகள் காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகும். மாலைப் பரீட்சை பிற்பகல் 1 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கும் ஆரம்பிக்கும்.
பரீட்சைக் காலத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் சத்தமாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் அல்லது விழாக்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
பரீட்சை மோசடிகள் அதாவது தவறான தகவல்களைப் பரப்புதல், வினாத்தாள் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுதல் தொடர்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை பரீட்சைக் காலத்தில் ஏதேனும் அவசர நிலைகளைக் கையாளும் பொருட்டு விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திடீர் அனர்த்தங்கள் குறித்த தகவல்களை 117 என்ற இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவிக்கலாம்.
அல்லது பரீட்சைத் திணைக்களத்தை நேரடியாக 1911 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டுப் பிரிவு இலக்கங்களான 0113 668 026 அல்லது 0113 668 032 ஊடாக மேலதிக உதவிகளைப் பெறத் தொடர்புகொள்ளலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.