பொழுதுபோக்கு
எம்.எஸ்.வி தூக்கி கொடுத்தார், இளையராஜா அடித்தார்; நான் போய் விழுந்துட்டேன்: கவிஞர் வாலி வாழ்க்கை அனுபவம்!
எம்.எஸ்.வி தூக்கி கொடுத்தார், இளையராஜா அடித்தார்; நான் போய் விழுந்துட்டேன்: கவிஞர் வாலி வாழ்க்கை அனுபவம்!
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். சினிமாவில் வாய்ப்பு தேடிய கவிஞர் வாலி, வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், ஊருக்கு போகலாம் என்று முடிவு செய்தபோது, கண்ணதாசன் எழுதிய ”மயக்கமா கலக்கமா” என்ற பாடலை கேட்டு மதுரை செல்லும் எண்ணத்தை கைவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.அதன்பிறகு ‘இதயத்தில் நீ’ படத்தில் தொடங்கி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த கற்பகம் படத்தின் மூலம் பிரபலமாகி அசத்திய வாலி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ரஜினி, கமல், சூர்யா, சாந்தனு என 4 தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும், எம்.எஸ்.விஸ்வநாதன் காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத் வரை பாடல்களை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு. காலத்திற்கு ஏற்ப தனது பாடல்களையும் அப்டேட்டாக எழுதி வந்தவர் வாலி. அதுமட்டுமல்லாமல், கவிஞர் வாலி, நான் ரெண்டு தமிழ் வைத்துள்ளேன். ஒன்னு விற்பனை தமிழ், இன்னொன்னு கற்பனை தமிழ். விற்பனை தமிழ் கோடம்பாக்கத்திற்கு, கற்பனை தமிழ் கவியரங்கத்திற்கு என்று நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் விஸ்வநாதன் இல்லை என்றால் தான் இல்லை என்று கவிஞர் வாலி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய அகவையின் காரணமாக நான் சற்று இறையருளால் ஆன்மிக ஞானம் பெற்றிருப்பதால் தழும்பாமல் இந்த புகழை எல்லாம் ஏற்றுக் கொண்டு இத்தனை புகழும் என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்த வார்த்தை உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் வார்த்தை அல்ல மெய்யான வார்த்தை. விஸ்வநாதன் இல்லை என்றால் நான் தைரியமாக சொல்வேன் வாலி இல்லை எஸ்.பி.பால சுப்ரமணியம் இல்லை வாணி ஜெயராம் இல்லை. இளையராஜா என்னை ஏமாற்றிவிட்டார். ’மாலை பொழுதின் மயக்கத்திலே’ பாடலை இளையராஜா பாடும் பொழுது அற்புதமாக இருந்தது. இளையராஜா உயரிய மனிதர். என் பெயர் வாலி ஆனால், காலத்தின் கையில் நான் ஒரு வாலிபால். வாலிபால் விளையாட்டு போன்று விஸ்வநாதன் தூக்கி கொடுத்தார். இளையராஜா அடித்தார், நான் என் சரியான இலக்கை அடைந்தேன்” என்றார்.