இலங்கை
சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான தொடர்பில் ஆய்வு
சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான தொடர்பில் ஆய்வு
இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் சமீபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு (2026-2035) செயல்படுத்தப்படவுள்ள தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப நாட்டின் இலவச சுகாதார அமைப்பை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்காகப் பின்பற்ற வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால முறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கலுக்கான ஒரு மூலோபாய கட்டமைப்பை நிறுவுதல், டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், சர்வதேச ஆதரவுடன் முக்கிய திட்டங்களை (HIQI, HSEP, PHSEP) ஏற்றுக்கொள்வது மற்றும் செயல்படுத்துதல், டிஜிட்டல் மாற்றத்திற்கான முக்கிய கருத்துக்கள் மற்றும் தேவைகள், வழிநடத்தல் குழு கருத்துக்கள், வரைவு கருத்துக்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டன.
தொடர்புடைய தரவுகளின் பாதுகாப்பான சேமிப்பு, மனிதவள மேம்பாடு மற்றும் இந்தப் பணியை திறம்பட நிறைவேற்றுவதற்குத் தேவையான பயிற்சி குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விடயங்கள் தொடர்பான சட்ட வரைவு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அர்ஜுன திலகரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த மூத்த ஜனாதிபதி ஆலோசகர் வைத்தியர் ஹான்ஸ் விஜேசூரிய, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.