தொழில்நுட்பம்

நிஜ பீனிக்ஸ் உயிரினங்கள்… 120°C வெப்பத்திலும் உயிர்வாழும் அதிசயம்!

Published

on

நிஜ பீனிக்ஸ் உயிரினங்கள்… 120°C வெப்பத்திலும் உயிர்வாழும் அதிசயம்!

கிரேக்க, எகிப்திய புராணங்களில் மட்டும் கேள்விபட்ட பீனிக்ஸ் பறவைபோல, தீவிர வெப்பத்தையும் தீயையும் தாங்கக்கூடிய நிஜ உயிரினங்கள் உலகில் உள்ளன. 120°C கொதிக்கும் வெப்பத்திலும் உயிர்வாழும் நுண்ணுயிரிகள் மற்றும் காட்டுத்தீயிலும் அழியாத வண்டுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆச்சரியமூட்டும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.தீயில் எரிந்து சாம்பலானாலும் அதில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் ‘பீனிக்ஸ்’ பறவை குறித்து கிரேக்க, எகிப்திய புராணங்கள் மற்றும் ‘ஹாரி பாட்டர்’ போன்ற கற்பனை கதைகளில் நாம் கேட்டிருக்கிறோம். இந்த கற்பனைப் பறவை நிஜத்தில் இல்லை என்றாலும், அதன் திறன்களைபோல அல்லது அதையும் மிஞ்சும் சில உயிரினங்கள் பூமியில் வாழ்வது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவையைப் போலவே, தீவிர வெப்பம் மற்றும் நெருப்பைத் தாங்கும் திறன் கொண்ட, ஏன் தீயிலிருந்து மீண்டும் உயிர் பெறும் உயிரினங்களும் உள்ளன.120°C வெப்பத்தில் வாழும் நுண்ணுயிரிகள்சாதாரணமாக 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தண்ணீர் கொதித்து நீராவியாக மாறும். இந்தச் சூழலில் கிட்டத்தட்ட எந்த விலங்குகளோ அல்லது பறவைகளோ உயிர்வாழ முடியாது. மனித தோல் உரிந்து, சதை வெந்துவிடும். ஆனால், ‘ஹைப்பர் தெர்மோஃபைல்கள்’ (Hyperthermophiles) எனப்படும் ஒற்றை செல் நுண்ணுயிரிகள், 120 டிகிரி செல்சியஸ் (250°F) வரையிலான அதிதீவிர வெப்பத்திலும் உயிர்வாழக் கூடியவை. இவை ‘ஆர்க்கியா’ (Archaea) எனப்படும் ஒரு வகை பாக்டீரியா இனத்தைச் சேர்ந்தவை.இவை வெப்பத்தை எவ்வாறு தாங்குகின்றன?இந்த உயிரினங்கள், தங்கள் உடலிலுள்ள புரதங்கள் சிதைந்துபோகாமல் இருக்க, பல சிறப்பு மூலக்கூறு உத்திகளைக் கொண்டுள்ளன. இவற்றின் புரதங்களின் உள் பாகங்கள் நீர் விரட்டிகளாகச் செயல்படுகின்றன. இது அதிக வெப்பத்திலும் புரதம் அதன் அசல் வடிவத்தை இழக்காமல் இறுக்கமாகப் பராமரிக்க உதவுகிறது. இந்த உயிரினங்களின் புரதங்களுக்கு இடையில் ஹைட்ரஜன் பிணைப்புகள் மற்றும் அயனிப் பரிமாற்றம் போன்ற மூலக்கூறு இடைவினை மிக வலுவாக உள்ளன.இதனால் செல்களின் கட்டமைப்பு அதிக வெப்பத்திலும் சிதைந்துபோகாது. வெப்பத்தை தாங்கும் திறனுள்ள சிறப்பு அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி, இவை தங்கள் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்கின்றன.காட்டுத்தீயை வெல்லும் வண்டுகள்நுண்ணுயிரிகள் மட்டுமல்ல, சில பெரிய உயிரினங்களும் இத்தகைய வெப்பத்தைத் தாங்குகின்றன. தென்னாப்ரிக்காவில் காட்டுத்தீ ஏற்படும் பகுதிகளில் ‘அந்துப்பூச்சிகள்’ (Moths) எனப்படும் ஒரு வகை வண்டுகளை (Weevils) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக, இந்த வகை வண்டுகளால் வேகமாகப் பறக்க முடியாது. அப்படியிருக்கையில், இவை காட்டுத்தீயில் இருந்து எவ்வாறு தப்பிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருந்தது. இவை ‘எக்டோதெர்மிக்’ (Ectothermic) உயிரினங்கள், அதாவது தங்கள் உடல் வெப்பநிலையைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலையிலே பராமரிக்கும். சில இனங்கள் (ஓக்லாடியஸ் கோஸ்டிகர் மற்றும் கிரிப்டோலாரின்க்ஸ் வரியாபிலிஸ்) 53.4°C வரையிலான வெப்பநிலையைத் தாங்கக் கூடியவை.நெருப்பிலிருந்து உயிர் பெறும் தந்திரம்:இந்த வண்டுகள் தீயிலிருந்து தப்பிக்க 2 முக்கிய உத்திகளைக் கையாள்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தீயின் போது மண்ணைத் தோண்டி நிலத்தடிக்குள் சென்று ஒளிந்து கொள்வது. இந்த வண்டுகள் தங்கள் முட்டைகளைத் தீயில் எளிதில் கருகாத, மிக கடினமான தாவர பாகங்களில் இடுகின்றன. காட்டுத்தீ ஏற்பட்டு முடிந்து, அனைத்தும் சாம்பலான பிறகு, பாதுகாக்கப்பட்ட அந்த முட்டைகளில் இருந்து புதிய வண்டுகள் வெளிவருகின்றன. இது, சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர்த்தெழுவதைப் போன்ற ஒரு நிகழ்வாகும்.பீனிக்ஸ் பறவைகள் கற்பனையில் மட்டுமே காணப்பட்டாலும், அதைவிட விசித்திரமான உண்மைகள் இயற்கையில் நிறைந்துள்ளன என்பதை இந்த உயிரினங்கள் நிரூபிக்கின்றன. நாம் இன்னும் அறியாத பல ரகசியங்கள் இயற்கையில் மறைந்துள்ளன என்பதையும், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் இயற்கையின் பல அதிசயங்களை நம்மால் வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த உயிரினங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version