சினிமா
பிரவீன் காந்தியின் அடாவடி.. போர்க்களமாக மாறிய தயாரிப்பாளர் சங்க பொதுக் கூட்டம்
பிரவீன் காந்தியின் அடாவடி.. போர்க்களமாக மாறிய தயாரிப்பாளர் சங்க பொதுக் கூட்டம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடந்துள்ளது. இதில் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தியும் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசிக்கும் போது சத்தமாக வாசிக்க வில்லை என்று சர்ச்சை எழுந்தது. இதனால் பின் வரிசையில் இருந்தவர்கள் அமைதியின்றி காணப்பட்டனர். தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கி வந்து மீண்டும் அந்த தீர்மானங்களை வாசித்துள்ளார்கள். அந்த நேரத்தில் கீழே அமர்ந்திருந்த ஒரு தரப்பினர் மேடையில் இருந்த பிரவீன் காந்தி உள்ளிட்டோரை பார்த்து தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் பழைய பிரச்சினைகளையும் மீண்டும் குழப்பி உள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்துள்ளது . அதில் பிரவீன் காந்தி சற்று சத்தமாக பேசியுள்ளார். மேலும் இந்த சண்டையில் அங்கே இருந்த செய்தியாளர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள்.. இது எங்களுடைய குடும்ப பிரச்சினை என்றும் கூறியுள்ளார்கள். இந்த மோதல் சம்பவத்தால் பொதுக்குழு கூட்டம் நடந்த இடமே போர்க்களமாக மாறி உள்ளது. குறித்த பொதுக்கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் பட வியாபாரத்தில் பங்கு பெற்றுத் தான் நடிக்க வேண்டும், படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிடப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராகவும் சிலர் போர்க்கொடி தூக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.