இந்தியா
70 பேருடன் சென்ற படகு… மலேசியா அருகே கவிழ்ந்து விபத்து; 11 பேர் உயிரிழந்ததாக தகவல்
70 பேருடன் சென்ற படகு… மலேசியா அருகே கவிழ்ந்து விபத்து; 11 பேர் உயிரிழந்ததாக தகவல்
மியான்மரில் இருந்து ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 70 பேர் படகில் இருந்ததாக கூறப்படும் நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து மலேசிய கடல்சார் அமைப்பு தெரிவித்ததாவது, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்ட அந்தப் படகு லாங்காவி தீவு அருகே மூழ்கியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளின் உதவியுடன் 170 சதுர கடல் மைல்கள் பரப்பளவில் வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.”நாங்கள் தாய்லாந்து அமைப்புடன் மிகவும் நல்ல உறவை கொண்டுள்ளோம், அதனால் நல்ல தொடர்பும் தகவல் பரிமாற்றமும் நடைபெறுகிறது,” என்று மலேசியாவின் கெதா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களுக்கான கடல்சார் பாதுகாப்பு அமைப்பை தலைமை தாங்கும் ரொம்லி முஸ்தபா கூறினார். தேடுதல் நடவடிக்கை ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.இதுவரை மீட்கப்பட்ட 13 பேரில் 11 ரோஹிங்கியாக்களும், 2 பங்களாதேஷ் நாட்டு மக்களும் அடங்குவர். விசாரணையில், அந்தப் படகு மியான்மாரின் ரக்கைன் மாநிலத்தில் உள்ள புதிதாங் என்ற இடத்திலிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. தேடுதல் நடவடிக்கையில் உயிரிழந்தவர்கள் பலரை கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று ரொம்லி முஸ்தபா தெரிவித்துள்ளார். மியான்மாரில் குடியுரிமையற்ற முஸ்லிம் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கியர்கள், பல ஆண்டுகளாக வன்முறை, பாகுபாடு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை சந்தித்துள்ளனர். பங்களாதேஷின் அகதி முகாம்களிலும் அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். பாதுகாப்பும் சிறந்த வாழ்வாதாரமும் தேடி, பலர் மலேசியா மற்றும் இந்தோனேஷியா நோக்கி ஆபத்தான கடல் பயணங்களில் ஈடுபடுகின்றனர்.ஐ.நா. அமைப்பின் தகவலின் படி, இந்த ஆண்டிலேயே 5,100-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் மியான்மார் மற்றும் பங்களாதேஷிலிருந்து படகுகளில் புறப்பட்ட நிலையில் அவர்களில் 600 பேர் உயிரிழந்ததாகவும் காணாமல் போனதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பெண்களில் இருவரிடம் ரோஹிங்கியா அகதிகள் என அடையாள அட்டை இருப்பதாக தாய்லாந்து கடல்சார் பாதுகாப்பு மையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.முன்பு மனிதாபிமான காரணங்களுக்காக மலேசியா ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும், பாதுகாப்பு மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக சமீப காலங்களில் வருகைகளை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. ஐ.நா. தரவின்படி, மலேசியாவில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் எண்ணிக்கை சுமார் 1,17,670 ஆகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க லிங்கை கிளிக் செய்க